Search This Blog

Wednesday, September 1, 2010

அருள்மிகுபல்லவனேஸ்வரர் திருக்கோவில் பல்லவனீச்சுரம்.{பூம்புகார்}



சிவஸ்தலம் பெயர்-திருபல்லவனீச்சுரம்.{பூம்புகார்}
இறைவன் பெயர் பல்லவனேஸ்வரர்
இறைவி பெயர் சௌந்தரநாயகி
சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.


கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப் பெருமானின் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன.

வெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி, நேரே இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளியுள்ளார். உள்மண்டபத்தில் வலதுபுறம் சிதம்பரத்தில் உள்ளது போன்றே அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.

காவிரிப்பூம்பட்டிணம் பட்டினத்தார் அவதார தலம். பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் "பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.